நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்து, வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 3-ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவில் மீண்டும் உள்கட்சிப் பூசலும் கலகக் குரல்களும் வெடித்துள்ளன. தற்போது கட்சி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் மற்றொரு அணியாகவும் இரண்டாகப் பிளவுபட்டு நிற்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரத்தில் இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களித்த நிலையில், வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால், கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டதாக இரு தரப்பினரும் மாற்றி மாற்றி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளனர். இம்மனுக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தின் ஆதரவு நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு அதிரடியாக நீக்கி வருகிறார். ஆனால், கட்சியில் பிளவு நிலவி வரும் சூழலில் தங்களை நீக்கியது செல்லாது என வேலுமணி தரப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, கட்சியின் பொதுக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு வேலுமணி தரப்பு தொடர்ந்து கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வருகிறது.
பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஆதரவாக, 5-ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களிடம் (சுமார் ஆயிரம் பேரிடம்) கையெழுத்துப் பெற்று எடப்பாடி பழனிசாமி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேலுமணி தரப்பு தீவிரமாக முயன்று வருகிறது. இதையறிந்த எடப்பாடி பழனிசாமி, எதிர் தரப்பினர் கேட்டால் யாரும் கையெழுத்துப் போடக் கூடாது எனத் தனது ஆதரவாளர்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். நாளுக்கு நாள் வலுத்து வரும் இந்த எடப்பாடி – வேலுமணி மோதலால் அதிமுகவின் எதிர்காலம் என்னாகுமோ என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் தொற்றிக்கொண்டுள்ளது.
