இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரர் தான் வருண் சக்கரவர்த்தி. கர்நாடகாவின் பீதாரில் பிறந்த இவர் SRM பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் பெற்றவர். 2021 ஆம் ஆண்டில் தன்னுடைய 25 வயதில் வருண் சக்கரவர்த்தி தன்னுடைய வேலையை விட்டுவிட்டு தொழில் முறையாக கிரிக்கெட்டை தொடர முடிவு செய்தார். இவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன். அபாரமாக வந்து வீசக்கூடிய திறமை கொண்டவர். இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணிக்காக லிஸ்ட் ஏ பிரிவில் அறிமுகமானார். தற்போது சுழல் பந்துவீச்சாளராக 106 டி20 போட்டிகள், 18 டி20 மற்றும் 2 ஒரு நாள் போட்டிகள் உட்பட 152 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐபிஎல் இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. கடைசியாக 2013-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி இந்த சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த நிலையில், தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அந்த கோப்பையை சுமார் 12 வருடத்திற்கு பின் கைப்பற்றி சாதனை படைத்தது. இந்திய அணி சாம்பியன் ஆனதற்கு பின்னணியில் ஒரு தமிழர் இருக்கிறார். அவர் தான் வருண் சக்கரவர்த்தி. இவர் தன் மாயாஜால சுழலால் எதிரணியினரை திணறடித்து இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றி இருந்தார். அடுத்ததாக ஐபிஎல் போட்டிக்காக தயாராகி வருகிறார் ..

இந்நிலையில் வரும் சக்கரவர்த்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் கிரிக்கெட்டில் வருவதற்கு முன்பு தனது வாழ்க்கை எப்படி இருந்தது என்பது குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், சாம்பியன் டிராபியில் நான் விளையாடுவேன் என எதிர்பார்க்கவே இல்லை. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு வா என்று கூட்டிட்டு போயி சாம்பியன் டிராபி போட்டியிலும் என்ன விளையாட வச்சுட்டாங்க. எனக்கு கிடைச்ச வாய்ப்ப நான் பயன்படுத்திக் கொண்டேன். ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்ள எப்போதுமே நான் விரும்புவேன். கிரிக்கெட் மட்டுமே என்னுடைய வாழ்க்கை கிடையாது. கல்லூரி முடித்த பிறகு தான் வாழ்க்கை என்ன என்பதை தெரிந்து கொண்டேன்.

முதலில் ஒரு ஆர்க்கிடெக்சர் கம்பெனி தான் ஆரம்பித்தேன். பல லட்சம் செலவு செய்து ஆரம்பித்த கம்பெனி சில மாதங்களிலேயே வர்தா புயலால் அப்படியே பாழாகிவிட்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் ஃபிலிம் மேக்கிங் வாய்ப்பு கிடைத்தது. நான் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளே சென்றபோது ஏதோ ஒரு கேரக்டர் கொடுக்கிறோம் அதுல கொஞ்ச நாளைக்கு நடி என்று தான் சொன்னாங்க. அதையும் கேட்டு கொஞ்ச நாள் பயணித்தேன்.

அப்படியே சைடுல கிரிக்கெட்டையும் விடல. முதலில் டென்னிஸ் பால் கிரிக்கெட் மேட்ச்சில் பெட் கட்டி விளையாடி இருக்கேன். அதன் பிறகு கிரிக்கெட்டில் முதன்முதலாக விக்கெட் கீப்பராகத்தான் நுழைந்தேன். மெல்ல மெல்ல கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு தான் இன்று இந்த இடத்தில் நிற்கிறேன். எந்த இடத்திலும் நான் துவண்டு போகவில்லை. கிரிக்கெட் மட்டுமே என்னுடைய வாழ்க்கை என்று நான் நினைக்கவில்லை. கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து லட்சிய பாதையை நோக்கி தான் என்னுடைய பயணம் இருந்தது என தன் வாழ்வில் சந்தித்த கசப்பான சம்பவங்களை வருண் சக்கரவர்த்தி பகிர்ந்து உள்ளார்.
