அருப்புக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக கூட்டணியில் தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்புகள் குறித்து மிகுந்த வேதனையோடு பகிர்ந்துள்ளார். கிளைகளே இல்லாத, ஆள் பலமே இல்லாத கட்சிகளுக்கு தாராளமாக இடங்களை ஒதுக்கீடு செய்த திமுக, தங்களை மிகக் கேவலமாக நடத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். “காணாமல் போகக்கூடிய நிலையில் இருந்த கட்சிக்கு 10 சீட்களும், மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் ஆளே இல்லாத, வட மாவட்டங்களில் ஊருக்கு 10 பேர் கூட இல்லாத விசிகவிற்கு 8 சீட்களும் கொடுத்த திமுக, எங்களை அவமானப்படுத்தியது. என்னைப்போல் திமுகவை உயர்த்திப் பிடித்த தலைவர் யாரும் இல்லை; ஆனால், சுயமரியாதையையும் தன்மானத்தையும் கொஞ்சம் இழந்துவிட்டுத்தான் நாங்கள் இத்தனை காலம் திமுக கூட்டணியில் பயணித்தோம்” என்று வைகோ மிக உருக்கமாகக் குறிப்பிட்டார்.
மேலும், தவெக தலைவர் விஜய் குறித்துப் பேசிய அவர், இன்னும் ஒரு ஆறு மாத காலத்திற்குள் விஜய் தன்னை முழுமையாக ஆயத்தப்படுத்திக் கொள்வார் என்றும், அவரிடம் வலுவான கருத்தும் காரமும் இருக்கிறது என்றும் பாராட்டினார். தவெகவுடன் சேர மதிமுக 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும், அண்ணா சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாகவும் பரவும் அவதூறுகளுக்கு, “எனக்கு பணத்தாசை கொஞ்சம் கூட கிடையாது, நரம்பில்லாத நாக்கு எதை வே வேண்டுமானாலும் பேசும்” என்று வைகோ ஆவேசமாக மறுப்பு தெரிவித்தார். கடந்த 9 ஆண்டு கால கூட்டணியில் தங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றும், மதிமுகவிற்கான சோதனைக் காலம் முடிந்து தற்போது வசந்த காலம் தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், தொண்டர்களின் காயங்களுக்கு மருந்திட்டு, தன்மானத்தையும் சுயமரியாதையையும் காக்கும் வகையில் பொதுக்குழுவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
