அதிமுக ஆட்சிக்காலத்தோடு ஒப்பிடுகையில், தற்போதைய திமுக ஆட்சியில் தமிழக மின்சாரத் துறை பெரும் நிதி நெருக்கடியிலிருந்து மீட்கப்பட்டு, சீரான மின் விநியோகத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நலிவடைந்துகிடந்த மின் துறையை போதுமான நிதி ஒதுக்கி, பல்வேறு சீர்திருத்தங்கள் மூலம் காப்பாற்றியவர் மு.க.ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார். கடந்த அதிமுக ஆட்சியில் மூன்று கட்டங்களாக மின் கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும் வருவாய் பற்றாக்குறை நிலவியதாகவும், ஆனால் திமுக அரசின் முறையான பொருளாதார நடவடிக்கைகளால் மின் துறையின் வருவாய் பற்றாக்குறை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
திமுக அரசின் சிக்கன நடவடிக்கைகளின் காரணமாக மின் துறையின் வருவாய் பற்றாக்குறை 58,000 கோடி ரூபாயிலிருந்து 34,000 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர், இதன் மூலம் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் வட்டிப் பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் மின் துறையின் வருவாய் 1.77 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த வருவாய் உயர்வு வெறும் கட்டண உயர்வால் மட்டுமே சாத்தியமாகவில்லை, மின்துறையில் கொண்டுவரப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களாலேயே சாத்தியமானது என்றார். அதே நேரத்தில், ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மின் தேவையை ஈடுசெய்ய வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதால் செலவினங்கள் அதிகரித்துள்ளன என்றும் அவர் விளக்கமளித்தார்.
தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு அண்மையில் வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த செந்தில் பாலாஜி, அந்த அறிக்கை உள்நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடன்களுக்கு திமுக அரசு வட்டி செலுத்திய விவரங்கள் போன்ற பல முக்கியமான தகவல்கள் அந்த வெள்ளை அறிக்கையில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும், தவெக அரசு தற்போது வழங்கியுள்ள பணி நியமன ஆணைகள், கடந்த ஆகஸ்ட் மாதமே திமுக ஆட்சியில் தேர்வுகள் நடத்தப்பட்டு இறுதி செய்யப்பட்டவை என்றும், திமுக அரசின் உழைப்பிற்கான பணி ஆணையைத்தான் தற்போது விஜய் வழங்கியுள்ளார் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
