தமிழ் சினிமாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் வாகை சூடவா. இயக்குனர் ஏ சற்குணம் இயக்கிய இரண்டாவது திரைப்படம் இது. இந்த திரைப்படத்தில் விமல், இனியா, பாக்கியராஜ், பொன்வண்ணன். தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். தமிழ்நாட்டில் 1960 இல் புதுக்கோட்டை அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் நடக்கும் சில காட்சிகளை மையப்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் அமைந்திருந்தது.
சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் இந்த திரைப்படம் பெற்றிருந்தது. ஆசிரியர் படிப்பை முடித்துவிட்டு அரசாங்க வேலைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞனை அவரது தந்தை கிராம சேவா என்ற சமூக நல அமைப்பு மூலமாக ஒரு கிராமத்திற்கு குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க அனுப்புகிறார். அப்படி ஆறு மாதம் சொல்லிக் கொடுத்தால் ஒரு சான்றிதழ் கிடைக்கும்.
இதை வைத்து அரசாங்க வேலை வாங்கிவிடலாம் என்ற கனவுடன் சொல்லும் இளைஞன் அங்கு இருக்கும் குழந்தைகள் மற்றும் மக்களிடம் மாட்டிக் கொண்டு அவதிப்படுவதும், அதன் பிறகு அந்த குழந்தைகளுக்கு ஏதாவது கற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணி அவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுப்பதுதான் இப்படத்தின் கதையாக அமைந்திருந்தது. இப்படத்தில் அனைத்து கதாபாத்திரமும் எதார்த்தமாக இருந்தது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும். ஸ்டண்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் பணியாற்றி இருந்தார். இந்தத் திரைப்படம் தற்போது வரை மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருக்கின்றது. அது மட்டுமில்லாமல் நடிகர் விமல் கெரியரில் முக்கிய திரைப்படமாகவும் அமைந்தது. இப்படம் குறித்த ஒரு சுவாரசியமான கதையை படத்தின் இயக்குனர் சற்குணம் சமீபத்தில் பேசியிருந்தார். இந்த திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் மிகவும் சிறப்பாக இருக்கும்.
அதில் ‘போறாளே போறாளே’ என்ற பாடல் உருவான விதம் குறித்து பேசி இருந்தார். இப்பாடல் வாகை சூடவா திரைப்படம் எடுப்பதற்கு ஏழு வருடத்திற்கு முன் வந்த பாடலாம். அதனை ஒருமுறை ஜிப்ரான் பாடிக்கொண்டிருந்த போது மிகவும் பிடித்திருந்த காரணத்தினால் இந்த ட்யூனை படத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று ஜிப்ரானிடம் கேட்டுக்கொண்ட காரணத்தினால் இப்பாடல் இடம் பெற்றதாக இயக்குனர் சற்குணம் கூறியிருந்தார்.