Connect with us

ஒரு பாடலை எடுக்க 3 மாதம்… படத்தை எடுக்க ஐந்து வருடம்… 80 ஆண்டுகளுக்கு முன்பே மாஸ் காட்டிய எஸ் எஸ் வாசன்!

CINEMA

ஒரு பாடலை எடுக்க 3 மாதம்… படத்தை எடுக்க ஐந்து வருடம்… 80 ஆண்டுகளுக்கு முன்பே மாஸ் காட்டிய எஸ் எஸ் வாசன்!

தமிழ் சினிமாவை இந்திய அளவில் கொண்டு சென்றதில் மறைந்த ஜெமினி ஸ்டுடியோ அதிபர் வாசனுக்கு பெரும் பங்குண்டு. அவர் எடுத்த ஔவையார், சந்திரலேகா உள்ளிட்ட படங்கள் பிரம்மாண்டத்தால் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தன. அதிலும் சந்திரலேகா என்ற திரைப்படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெற்ற வெற்றியை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

1940 ஆம் ஆண்டே திட்டமிடப்பட்டு, 3 ஆண்டுகள் முன் தயாரிப்புப் பணிகள் நடத்தி 1943 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்ட சந்திரலேகா திரைப்படம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் உருவாக்கத்தில் இருந்தது. சுதந்திரம் கிடைத்த பின்னர் படம் 1948ம் ஆண்டு வெளி வந்தது.  முதலில் இந்த படத்தை இயக்குனர் வேறொரு இயக்குனரை ஒப்பந்தம் செய்தார் வாசன். ஆனால் அவர் எடுத்த படம் தனக்கு பிடிக்காததால் தானே இயக்க முடிவு செய்தார்.

   

இந்த படத்தில் முக்கிய நட்சத்திரங்களாக ரஞ்சன், டி.ஆர். ராஜகுமாரி, எம்.கே. ராதா, வி. என். ஜானகி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், சுந்தரி பாய்  உட்பட பலர் நடித்திருந்தனர்.  படத்தின் பாடல்களுக்கு எஸ்.ராஜேஸ்வர ராவ் அவர்களும், காட்சிகளின் பின்னணிக்கு எம்.டி. பார்த்தசாரதி அவர்களும் இசையமைத்திருந்தனர்.

   

இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு முன்பாக வரும் ட்ரம்களின் மீதான குழு நடனம் படத்தின் பேசுபொருளாக அமைந்தது. அந்த காட்சியைப் பார்ப்பதற்காகவே மக்கள் மீண்டும் மீண்டும் தியேட்டருக்குப் படையெடுக்க ஆரம்பித்தனர். இந்த பாடலை எடுக்க மட்டும் 3 மாதங்கள் செலவிட்டுள்ளனர். அந்தக் காட்சியை பிரம்மாண்டமாகக் கொண்டுவர பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதே போல படத்தை எடுத்து ரிலீஸ் செய்ய ஐந்து ஆண்டுகள் ஆனதாம். ஆனாலும் கவலைப்படாமல் மிக அதிக செலவு செய்து படத்தை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார் எஸ் எஸ் வாசன்.

 

தமிழக அளவில் சக்கைபோடு போட்ட இந்த திரைப்படத்தை இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட்டார் எஸ் எஸ் வாசன். இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூலம் இந்த படம் அந்த காலத்திலேயே 4 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது. ஆனால் இந்த படத்துக்காக வரியாகவே 1.25 கோடி ரூபாய் அளவுக்கு செலுத்த நேரிட்டதாக வாசன் ஒரு இடத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

More in CINEMA

To Top