தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில் வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார்.
ஆனால் எந்தகாலத்திலும் அவர் நம்பர் 1 கவிஞராக இருந்தார். எப்போதும் இரண்டாவது இடத்திலேயே இருந்தார். ஆனால் 60 ஆண்டுகளில் அவருக்கு பாடல் எழுத வாய்ப்புக் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை உருவானதே இல்லை. அந்த அளவுக்கு இறக்கும் வரையிலும் பிஸியாக இருந்தார்.
வாலியின் தனிச்சிறப்பே அவர் யாரிடமும் சண்டை போட்டு பிரிந்து செல்ல மாட்டார் என்பதுதான். எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா தொடங்கி அனிருத் வரை அவர் பாடல்கள் எழுத காரணமாக அவரின் இந்த பழகும் தன்மைதான். சினிமாவில் நுழைந்து ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் எழுதிக் குவித்திருந்தாலும் ஆரம்பத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் எளிதில் கிடைக்கவில்லை.
இந்நிலையில் வாலிபக் கவிஞரான வாலியைப் பாராட்டி அவர் எழுதிய பாடல்களில் 1000 பாடல்களை தொகுத்து வாலி ஆயிரம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதற்கு முன்னால் வாலியை கௌரவிக்க வசந்த் தொலைக்காட்சி அவரோடு பணியாற்றியவர்கள் பலரை அழைத்து அவருடனான நினைவுகளை பகிர்ந்துகொள்ள சொல்லி வாலிப வாலி என்ற நிகழ்ச்சியையும் நடத்தியது.
வாலி 1000 புத்தக வெளியீட்டு விழாவில் வாலியின் புகழை பாடும் விதமாக ஒரு பாடல் இடம்பெறவேண்டும் என்று நெல்லை ஜெயந்தா விரும்பியுள்ளார். வாலி எவ்வளவோ மறுத்தும் ஒரு பாடல் வேண்டும் என அவர் கூறிவிட்டதால் வாலியும் சம்மதித்து விட்டார். பாடல் எழுதி பதிவு முடிந்ததும் அதைக் கேட்க வாலி ஆசைப்பட்டுள்ளார்.
நெல்லை ஜெயந்தா அந்த பாடலை ஒலிக்க செய்துள்ளார். அதில் ஒரு வரியைக் கேட்டதும் வாலியின் முகம் மாறியுள்ளது. ‘கோடி கோடி கனவோடு கோடம்பாக்கம் சென்றாய், கண்ணதாசன் கண்ணெதிரே கொடி நாட்டி வென்றாய்” என்ற வரிகள்தான் அது. இதை கேட்ட வாலி, கடுமையாக கோபத்துடன், யார் யாரை வென்றது, கண்ணதாசனை நான் எப்படி வெல்ல முடியும் உடனடியாக இந்த வரிகளை மாற்று என்று கூறியுள்ளார். அதன் பின்னர் வரிகள் ’ கோடி கோடி கனவோடு கோடம்பாக்கம் சென்றாய், கண்ணதாசன் கொடியோடு கொடி நாட்டி நின்றாய்’ என மாற்றப்பட்டுள்ளது.
