CINEMA
யாராவது டி ஆர் மகாலிங்கத்தை வச்சி படம் எடுப்பாங்களா…? ஆனா கண்ணதாசன் செஞ்சார்- வாலி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில் வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.
திரையுலகில் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் எம் ஜி ஆர். தன்னுடைய படங்களுக்கு முதலில் கண்ணதாசனையே தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்து வந்தார் எம் ஜி ஆர். ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஒரு பிரிவு வந்தது. எம் ஜி ஆர் தீவிரமாக திமுகவில் இயங்கி வந்த நிலையில், கண்ணதாசன் திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவினார். அதன் பின்னர் கண்ணதாசன் எம் ஜி ஆரைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் எம் ஜி ஆர் வாலியை தன்னுடைய ஆஸ்தான கவியாக மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் பல நடிகர்களுக்கு எழுதிய வாலி, கடைசியாக சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.
வாலி தன்னுடைய இத்தனையாண்டு கால சினிமா வாழ்க்கையில் ஒரே ஒரு படத்தை இயக்கினார். அதுபோல சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதுதவிர எந்த துறையிலும் கால்பதிக்கவே இல்லை. ஒரு நேர்காணலில் இயக்குனர் வெங்கட்பிரபு “ஏன் நீங்கள் படம் தயாரிக்கவில்லை “ என்ற கேள்வியைக் கேட்ட போது நகைச்சுவையாக பதிலளித்தார்.
அதில் “ஏன் என் பணமெல்லாம் காலியாகப் போகவா.. நான் சினிமாவுல பாட்டெழுதுனது காசுக்காகதான். ஆனால் கண்ணதாசன் அப்படியில்லை. தன்னுடைய கவித்துவத்தைக் காட்டதான் அவர் ‘மாலையிட்ட மங்கை’ படம் எடுத்தார். அப்போது டி ஆர் மகாலிங்கம் மார்க்கெட்டிலேயே இல்லை. ஆனாலும் அந்த படத்தில் அவரைப் போட்டு எடுத்தார். அந்த படம் பாடல்களால் ஹிட்டாக டி ஆர் மகாலிங்கம், அடுத்து 10 ஆண்டுகளுக்கு ஒரு ரவுண்ட் வந்தார். அது போன்ற ஆசையெல்லாம் எனக்கில்லை” எனக் கூறியுள்ளார்.