“அன்று செங்கோட்டையன்… இன்று சண்முகம்”… அதே ஸ்கிரிப்ட்… அதே பாணி… அதிமுகவில் மீண்டும் ஒரு சரித்திரம்… இபிஎஸ்-க்கு அடுத்தடுத்த ஷாக்…!

By Nanthini on ஆனி 14, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீரென கையில் எடுத்துள்ள வாரிசு அரசியல் ஆயுதம், ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுன் பழனிசாமியைக் கட்சிக்குள் கொண்டு வர நாடகம் ஆடுவதாகச் சண்முகம் சாடியுள்ளார். இந்த அதிரடித் திருப்பம் குறித்து அரசியல் விமர்சகர்கள் ஒரு சுவாரசியமான ஒப்பீட்டை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். அதிமுகவில் இருந்து விலகுவதற்கு முந்தைய கடைசி சில நாட்களில் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் எத்தகைய கருத்துக்களைப் பேசிப் போர்க்கொடி தூக்கினாரோ, அதே பாணியில் தான் தற்போது சி.வி.சண்முகமும் பேசத் தொடங்கியுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

“அதிமுக தற்போது ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது; எடப்பாடி பழனிசாமி தனது மகன் மிதுன் பழனிசாமியைக் கட்சிக்குள் பின்வாசல் வழியாகக் கொண்டு வரத் தீவிரமாக முயற்சிக்கிறார்” என்று அன்று செங்கோட்டையன் வெடித்தார். தற்போது அதே வார்த்தைகளையும், அதே குற்றச்சாட்டுகளையும் தான் சி.வி.சண்முகமும் கையில் எடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தனிச்சார்பு முடிவுகளாலும், வாரிசை முன்னிறுத்தும் திட்டத்தாலும் அதிருப்தியின் உச்சத்துக்கே சென்ற சண்முகம், செங்கோட்டையன் பாணியிலேயே இபிஎஸ்-க்கு நேரடி ‘செக்’ வைத்துள்ளார். அதிமுகவில் ஒரு மூத்த தலைவர் தலைமைக்கு எதிராகப் பகிரங்கமாகத் தனது குரலை உயர்த்துகிறார் என்றாலே, அவர் கட்சியை விட்டு வெளியேறும் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் முடிவில் இருக்கிறார் என்பதுதான் அரசியல் யதார்த்தம்.

   

அன்று செங்கோட்டையன் பேசிய அதே ஸ்கிரிப்ட்டை இன்று சண்முகம் பேசுவதைப் பார்த்தால், அவரும் அதிமுகவில் தனது கடைசி நாட்களை நெருங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது என அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், கடந்த 3 வாரங்களாக அமைதியாக இருந்த சி.வி.சண்முகம் திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வெடித்துள்ளதற்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் அடுக்கப்படுகின்றன. வாரிசு அரசியல் குற்றச்சாட்டோடு நிறுத்தாமல், வன்னியர் சமூக மக்களால் தான் அதிமுக கடந்த தேர்தலில் 31 தொகுதிகளில் வென்றது என்ற அதிரடி சாதி ரீதியான விமர்சனத்தையும் அவர் முன்வைத்துள்ளது கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

   

ஏற்கனவே சி.வி.சண்முகத்தின் மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உண்மையில், அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதை எதிர்பார்த்தே சி.வி.சண்முகம் நேரடியாக எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கத் தொடங்கிவிட்டார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சுயேட்சையாக இருக்கும் பட்சத்தில், தமிழக அரசியல் களத்தில் வேகமாக வளர்ந்து வரும் ‘தமிழக வெற்றிக் கழகத்தில்’ (தவெக) அவரால் எளிதாக இணைய முடியும் என்றும் கணிக்கப்படுகிறது. இதனால் சி.வி.சண்முகத்தின் இந்த திடீர் பேட்டிக்கு பின்னணியில் ஆழமான அரசியல் கணக்குகள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.