ஹார்முஸ் ஜலசந்தி பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. லெபனான் விவகாரத்தால் ஈரான் – இஸ்ரேல் மீண்டும் நேரடி மோதலில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக செங்கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்க கடற்படையின் தாக்குதலால் ஏற்பட்ட விபத்தாக இருக்கலாம் எனவும் அனுமானிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக விபத்து நடந்த போது கப்பலில் எண்ணெய் இல்லை, கப்பல் காலியாக இருந்ததால் பெரிய அளவிலான தீவிபத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து ஓமனின் துக்ம் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்த வணிகக் கப்பலில் திடீரென தீப்பிடித்ததை அடுத்து, அதிலிருந்த மாலுமிகள் மற்றும் பணியாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முடுக்கப்பட்டன. டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விளக்கமளித்தனர். சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவி வரும் வேளையில், இந்தியப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து ராஜதந்திர மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, இக்கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் உட்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மீட்கப்பட்டவர்களின் தற்போதைய இருப்பிடம் குறித்தோ அல்லது அவர்களின் உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்களையோ சம்பந்தப்பட்ட தூதரகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மையைக் கண்டறியவும், கப்பலில் ஏற்பட்ட தீவிபத்திற்கான துல்லியமான காரணத்தை ஆராயவும் சர்வதேச கடல்சார் அமைப்புகளுடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
