மத்திய அரசு ஆன்லைன் வழியாக மேற்கொள்ளப்படும் யு.பி.ஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு MDR எனப்படும் சேவைக்கட்டணத்தை விதிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்புகளைத் திறம்படப் பராமரிப்பதற்காக, வங்கிகள் அல்லது கட்டண சேவை நிறுவனங்கள் வியாபாரிகளிடமிருந்து இக்கட்டணத்தை வசூலித்துக் கொள்ள இந்த நடவடிக்கை வழிவகை செய்கிறது.
தற்போதுள்ள நடைமுறையின்படி, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு சராசரியாக 1.5 சதவீதமும், டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 0.9 சதவீதமும் MDR கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் யு.பி.ஐ பரிவர்த்தனைகளுக்கும் சேவைக்கட்டணம் கொண்டுவரப்படுவது டிஜிட்டல் பரிவர்த்தனை தளத்தில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த புதிய கட்டண முறையானது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனினும், வணிகர்களின் வருடாந்திர வருவாய் மற்றும் அதிகத் தொகை கொண்ட யு.பி.ஐ பரிவர்த்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் அல்லது முறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
