ராஜஸ்தானின் சூரூ மாவட்டம் சுஜான்கரில் உள்ள ‘பதேபூரியா அரசு தாய்-சேய் மருத்துவமனை’ நுழைவுவாயிலின் கான்கிரீட் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. மருத்துவமனைக்குள் சிகிச்சைக்காகப் பெண் ஒருவர் நுழைந்த அந்த நொடியில், கட்டிடத்தின் கூரை இடிந்து அவர் மீது நேரடியாக விழுந்தது. இந்தத் திடுக்கிடும் தருணம் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விபத்தில் கூரையின் கனமான இடிபாடுகளுக்குள் சிக்கிய அந்தப் பெண்ணுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு, தீவிர சிகிச்சைக்காக அருகில் உள்ள பகடியா அரசு துணை மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நொடிப் பொழுதில் பெரு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, அவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
தற்போது தாய்-சேய் மருத்துவமனை செயல்பட்டு வரும் இந்தக் கட்டிடம், உண்மையில் பழைய டிரோமா சென்டர் கட்டிடமாகும். இது நீண்ட காலமாகப் பராமரிப்பின்றி பழுதாகி ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், இது குறித்து ஏற்கனவே நிர்வாகத்திற்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும் உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளின் பாதுகாப்பு குறித்து அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சமும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது
