தமிழகத்தில் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை விற்பனை செய்வது மற்றும் பதிவு செய்வதைத் தடுக்கும் நோக்கில், தமிழக அரசு மற்றும் பதிவுத்துறை மிகவும் கடுமையான புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. முறையான அங்கீகாரம் (DTCP/CMDA) அல்லது வரன்முறை சான்றிதழ் இல்லாத மனைப் பத்திரங்களைச் சார்-பதிவாளர்கள் எக்காரணம் கொண்டும் பதிவுக்கு ஏற்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை விதிகளையும் மீறி இத்தகைய பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது கண்டறியப்பட்டால், அந்தப் பத்திரப்பதிவு உடனடியாக ரத்து செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
அங்கீகாரமில்லாத மனைகளை வாங்குவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்துச் சார்-பதிவாளர் அலுவலகங்களிலும் புதிய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், விதிகளை மீறிப் பத்திரப்பதிவு செய்பவர்கள் மற்றும் அதற்குத் துணையாக இருக்கும் ஆவணதாரர்கள் என அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி ஆவணங்கள் மற்றும் முறையற்ற மனை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அங்கீகாரமில்லாத மனைகளை வாங்குவதால் சட்ட ரீதியான பாதுகாப்பு கிடைக்காது என்பதோடு, வங்கிகளில் கடன் பெறுவதிலும், எதிர்காலத்தில் அந்தச் சொத்தை விற்பனை செய்வதிலும் பெரும் சிக்கல்கள் ஏற்படும். மேலும், உரிமையாளரின் மறைவுக்குப் பிறகு வாரிசுதாரர்களுக்கு இடையே சொத்துரிமைப் பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்யும் போது, அந்த மனைக்கு முறையான அரசு அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
