தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தனியரசு, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தத் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை திமுக கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த தனியரசு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து அதிமுக மீதும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான செயல்பாடுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். குறிப்பாக, அதிமுக பாஜவின் கிளை அமைப்பாக மாறிவிட்டதாகவும், மேற்கு மண்டலத்தில் அதிமுக வலிமை இழந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இத்தகைய சூழலில், தற்போது அவர் மீண்டும் அதிமுக பக்கம் சாய்ந்திருப்பது அரசியல் நோக்கர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனியரசு, தற்போது மீண்டும் பழைய கூட்டணிக்கே திரும்ப வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. வரும் ஜனவரி 23-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை உறுதிப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இந்தச் சூழலில் தனியரசு – எடப்பாடி சந்திப்பு நிகழ்ந்திருப்பது, வரும் தேர்தலில் கொங்கு மண்டல அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
