தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக உடனான கூட்டணியை முடித்துக் கொண்ட அதிமுக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் பாஜக கூட்டணியை அமைத்துள்ளது. இதனால் அதிமுகவுக்குள் ஏற்பட்ட உட்கட்சி பூசல் மேலும் விரிவடைந்து செல்கிறது. சமீபத்தில் மூத்த நிர்வாகி செங்கோட்டையனை இபிஎஸ் நீக்கியதால் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அதிமுக உட்கட்சி சண்டை ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் திமுகவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றார். மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கவனமாக பேச வேண்டும் எனவும் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போதுதான் எங்களுடைய வேலை சுலபமாக இருக்கும் எனவும் கிண்டல் செய்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய உதயநிதி, அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நிரந்தரமாக இருப்பது தான் அந்த கட்சி தமிழக மக்களுக்கு செய்யும் ஒரே நல்ல விஷயம். இது எங்களுடைய வேலையை சுலபமாக்கும் என்று தெரிவித்த அவர் இதனை அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொள்வார்களா என தெரியாது. அப்படி நடப்பது தமிழகத்திற்கு மிகவும் நல்லது என்று கூறி எடப்பாடி பழனிச்சாமியை கிண்டலடித்துள்ளார்.
