தஞ்சாவூர் விசாரணைக்குப் பிறகு திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தான் பேசாத கருத்துகளைக் எடிட் செய்து தவறாகப் பரப்பியுள்ளதாகக் குற்றம்சாட்டினார். விவசாயிகள் நலனுக்காகத் தான் ஆற்றிய உரையைத் தவறான நோக்கத்தோடு சித்தரித்துள்ளதாகவும், மாநிலத்தில் எழும் உண்மையானப் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் சாடினார். தவெக நிர்வாகிகள் மீது உள்ள குற்றச்சாட்டுகளை மறைக்கவும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதைத் தடுக்கவுமே திட்டமிட்டு இந்த பொய் வழக்கு போடப்பட்டுத் தேசிய அளவில் பரப்பப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தான் எந்தப் பெண்ணையும் இழிவுபடுத்தும் எண்ணத்தில் பேசவில்லை என்றும், தமிழகப் பெண்கள் அனைவரையும் தனது சொந்தத் தாய், தங்கையாகவே மதிப்பதாகவும் உதயநிதி உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தார். தான் எவ்வித இரட்டை அர்த்தத்திலும் பேசவில்லை என்றும், ஒரே அர்த்தத்தில் தான் தெளிவுபடுத்தியதாகவும் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். பொய் வழக்குகளுக்கும் கைது நடவடிக்கைகளுக்கும் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும், விவசாயிகளின் உரிமைக்காக மேலும் நூறு முறை மேடைகளில் முழங்குவேன் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
