திமுக மாநாட்டில் தவெக அரசை ‘சோபா மாடல் அரசு’ என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து தனது விளக்கத்தை அளித்துள்ளார். இந்த விமர்சனம் குறித்துப் பேசிய அவர், சினிமாவில் வரும் காட்சிகளைப் போல யாராவது இந்த காலத்தில் சோபாவில் பணத்தை வைத்துக் கொடுப்பார்களா என்று கேள்வி எழுப்பியதுடன், மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத, எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஒரு கூற்றாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எழும்பூரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்திற்கு சோபா வந்த விவகாரம் குறித்து பேசிய திருமாவளவன், கட்சி அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அன்பளிப்பாக பொருட்களை வழங்குவது வழக்கமானதுதான் என்று தெரிவித்தார். தங்களுக்கு வந்த சோபாவை சுட்டிக்காட்டி உதயநிதி விமர்சனம் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், அதே காலகட்டத்தில் அதிமுகவின் ஒரு தரப்பிற்கு சோபா அனுப்பப்பட்டதாக கூறப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே அவர் அவ்வாறு பேசியிருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தனது காரில் ‘CM 2031’ என்ற சர்ச்சைக்குரிய பதிவெண் பலகை பொருத்தப்பட்டிருந்தது தொடர்பாக எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், ‘இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் தான் ஒரு பார்வையாளராகவே பங்கேற்றதாகத் தெளிவுபடுத்தினார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படப்பிடிப்புக்கான (Shooting purpose) காட்சிக்காகவே தம்மை அந்த காரில் ஏறுமாறு கேட்டுக்கொண்டதாகவும், இரவு நேரத்தின் காரணமாக அந்த காரில் என்ன எண் இருந்தது என்பதை கவனிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார்.
அச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது ஜாக்குவார் ரக கார் மட்டுமே என்றும், சிலர் கூறுவது போல டெஸ்லா கார் அல்ல என்றும் திருமாவளவன் சுட்டிக்காட்டினார். வழக்கம்போல அரசியல் வன்மம் கொண்ட சில கும்பல்களே இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், எவ்வித உண்மைத்தன்மையும் இல்லாத இத்தகைய விமர்சனங்களை மக்கள் ஒருபோதும் பொருட்படுத்த மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.
