மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களம் தற்பொழுது தீவிரமடைந்துள்ள நிலையில், மதுராந்தக திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக தவெக தலைவர் விஜய்யும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரம் செய்திருந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் இந்த பிரச்சாரப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பிரச்சாரத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் போதிய வசதிகள் செய்யப்படாததால் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். ஆனால், அந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு மக்களைச் சந்திக்காமலும் ஆறுதல் கூறாமலும் அன்றைய தவெக தலைவர் விஜய், திருச்சியிலிருந்து சென்னைக்கு ஓடிப் போனார். எந்தவொரு குற்றவுணர்ச்சியோ மனசாட்சியோ இல்லாமல் நடந்துகொண்ட அவர் ஒரு ஓடுகாலி” என்று கடுமையாகச் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எதிர்க்கட்சியாக இருந்தபோது நம்மை விமர்சித்தவர், இன்று கூட்டணி கட்சிகளின் தயவால் முதலமைச்சராகியிருக்கலாம்; ஆனால் அவரால் நிம்மதியாக தூங்க முடியாது. நாம் ஒன்று சொல்வோம்… ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி” எனக் கூறி தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். மேலும், இந்த இடைத்தேர்தல் இயற்கையாக வந்ததல்ல என்றும், அதிமுக எம்.எல்.ஏ-க்களைத் தூக்கி, பதவி விலகச் செய்து செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் குற்றம்சாட்டினார்.
திமுக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகப் பொய் பிரச்சாரம் செய்த தவெக, புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “10 நாட்களில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் உங்களிடம் வாக்கு கேட்க எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? தொகுதி மக்கள் தவெக வேட்பாளர்களை விரட்டியடிக்கத் தொடங்கிவிட்டனர்” என்று தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
