“திமுக ஒரு ஓட்டு அதிகமா வாங்கினாலும் ராஜினாமா செய்றேன்”….. மதுராந்தகத்தில் ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி சபதம்….!

By Nanthini on புரட்டாதி 28, 2026

Spread the love

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் எனப் பலமுனைப் போட்டி நிலவும் நிலையில், அரசியல் தலைவர்களின் சவால்களும் விமர்சனங்களும் பரப்புரையை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளன. இத்தொகுதியில் தவெக ஆதரவாளர்கள் திரண்டு வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆற்றிய தீவிர பிரச்சார உரை தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுக தலைமையைக் காரசாரமாகச் சாடினார். 1967-இல் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்தது மக்களுக்கான ஆட்சி என்றும், அதன்பின் கலைஞர் கருணாநிதியின் காலத்தில் அது குடும்ப ஆட்சியாக மாறியது என்றும் குற்றம் சாட்டினார். மேலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் மகன் உதயநிதி ஸ்டாலினைப் பெரிய மன்னனாக்க முயல்வதாகவும், மக்கள் நலனுக்காகப் போராடாமல் அரசியல் அந்தப்புரத்திலேயே இருக்கும் இளவரசருக்கு தேர்தல் என்ற யுத்தத்தைப் பற்றித் தெரியாது என்றும் கடுமையாக விமர்சித்தார்.

   

திமுகவின் குடும்ப அரசியலையும் மன்னராட்சிப் போக்கையும் வீழ்த்துவதற்காகவே மக்கள் தலைவராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் களமிறங்கியுள்ளார் என்று குறிப்பிட்ட அவர், உதயநிதி ஸ்டாலினுக்கு நேரடிச் சவால் ஒன்றை விடுத்தார். தேர்தல் களத்தில் உதயநிதி தவெக தலைவரைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு, முதலில் தங்களது கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜனநாயக முறையில் இந்தத் தேர்தலில் யார் மக்களின் நம்பிக்கையைப் பெறுகிறார்கள் என்பதைப் பார்க்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

   

இறுதியாகத் தனது சவாலை விரிவுபடுத்திய ஆதவ் அர்ஜுனா, “இன்னும் வாக்குப்பதிவுக்கு ஒரு வாரம் அவகாசம் உள்ளது, தேவைப்பட்டால் உங்கள் தந்தையைக் கூட பிரச்சாரத்திற்கு அழைத்து வாருங்கள். 70 ஆண்டு பாரம்பரியம் கொண்ட திமுக, இந்த மதுராந்தகம் தொகுதியில் எளிய வீட்டுப் பிள்ளைகளான தவெகவை விட ஒரே ஒரு வாக்கு அதிகமாகப் பெற்றாலும் நான் எனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று அதிரடியாக அறிவித்தார். அதேபோல் திமுக தோல்வியடைந்தால் உதயநிதி ஸ்டாலின் தனது பதவியை விலகத் தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.