“நீதிமன்ற உத்தரவு மீறலா?… 8 மணி நேரப் பயணம்… செங்கிப்பட்டியில் முற்றுகை… வேனை விட்டு இறங்க மறுத்த உதயநிதி ஸ்டாலின் அதிரடி கைது…!!”

By Swetha on ஆவணி 4, 2026

Spread the love

திருச்சியில் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திட்டமிட்டபடி தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படாமல் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். காலை 10.50 மணிக்கு கைது செய்யப்பட்ட அவர், சுமார் 8 மணி நேர வாகனப் பயணத்திற்குப் பிறகு மாலை 6.50 மணிக்கே காவல் நிலையம் வந்தடைந்தார். பயணத்தின் போது சிறுநீர் கழிக்கக்கூட வாகனம் நிறுத்தப்படவில்லை என திமுகவினர் குற்றம்சாட்டினர். முன்னதாக தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், அங்கு தொண்டர்கள் குவிந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் கடைசி நேரத்தில் விசாரணை இடத்தை மாற்றினர்.

விசாரணை இடம் மாற்றப்பட்ட செய்தி அறிந்ததும் செங்கிப்பட்டி காவல் நிலையத்தின் முன்பும் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டனர். உதயநிதி ஸ்டாலினின் கைதை கண்டித்தும் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய தொண்டர்கள், தடுப்புகளை தள்ளிவிட்டு காவல் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டு, அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமான சூழலும் நிலவியது.

   

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சை காவல் நிலையத்தில் மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால், செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் வேனை விட்டு இறங்க உதயநிதி ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறையினர் அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வேனில் இருந்து கீழே இறங்கிய உதயநிதி ஸ்டாலின், தொண்டர்களைப் பார்த்து புன்னகையுடன் கையசைத்து விட்டு காவல் நிலையத்திற்குள் சென்றார். அங்கு தஞ்சை கிழக்கு காவல் ஆய்வாளர் முன்னிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க தஞ்சையிலிருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் செங்கிப்பட்டியில் குவிக்கப்பட்டுள்ளனர்