நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் ஏன் திமுகவை முழுமையாக நிராகரித்தார்கள் என்ற உண்மையான காரணங்களை ஆராய்ந்து சுயபரிசோதனை செய்யாமல், தோல்விக்கான பழியை ராகுல் காந்தி மீதும் காங்கிரஸ் கட்சி மீதும் போடுவது தங்களின் பலவீனத்தை மறைக்கும் அப்பட்டமான முயற்சி என்றும் அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
மேலும், திமுக அரசின் குடும்ப ஆதிக்கம், முறையற்ற கமிஷன் அரசியல், கட்டுக்கடங்காத ஊழல் மற்றும் நிர்வாகத் தோல்விகளால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றுடன் திமுக தலைவர்களிடம் வெளிப்பட்ட அகந்தை மற்றும் ஆணவப் போக்குக்கு எதிராகவே தமிழக மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் தகுந்த பாடம் புகட்டியுள்ளதாக மாணிக்கம் தாகூர் தனது அறிக்கையில் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
