ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து நெகிழ வைத்த நெஞ்சை உருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அஸ்வஜீத் காம்ப்ளே என்ற அந்த இளைஞர், இதற்காகவே புனேவில் உள்ள தனது வீட்டிற்கு நேரில் சென்று இந்த இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.
இந்தத் தனித்துவமான முயற்சிக்கு பின்னால் ஒரு அழகான காரணம் ஒளிந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அஸ்வஜீத் தனது தந்தையுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது தந்தை தனது காலத்து நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அன்று அவர் தனது முதல் சம்பளத்தை அப்படியே ரொக்கமாகத் தன் பெற்றோரிடம் கொடுத்ததாகவும், ஆனால் இன்று அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டதால் அந்தத் தொட்டு உணரும் பாரம்பரிய மகிழ்ச்சி மறைந்துவிட்டது என்றும் வருத்தப்பட்டுள்ளார். இதனால் ஈர்க்கப்பட்ட அஸ்வஜீத், ஆன்லைன் பரிமாற்றங்களைத் தவிர்த்து, அந்த உன்னதமான நினைவை மீண்டும் தன் பெற்றோருக்கு உருவாக்கிக் கொடுக்க முடிவு செய்தார்.
https://www.instagram.com/reel/DZCwRnrsjwj/?utm_source=ig_web_button_share_sheet
அஸ்வஜீத் தன் பெற்றோரின் கண்களை மூடச் சொல்லி, அவர்கள் கைகளில் பணக்கட்டுகளையும் ஒரு கைக்கடிகாரத்தையும் பரிசாக வைக்கிறார். கண்களைத் திறந்து பார்த்த பெற்றோர், இன்ப அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். குறிப்பாக அவரது தாயார் அந்தப் பணத்தையும் தன் மகனையும் மாறி மாறிப் பார்த்து நெகிழும் காட்சிகள் பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்குகிறது. “நான் இன்று இந்த நிலைக்கு வந்ததற்கு என் பெற்றோரே காரணம்” என அஸ்வஜீத் குறிப்பிட்டுள்ளதோடு, இந்த தருணம் வெறும் பணத்தைப் பற்றியது அல்ல, அவர்களின் பல வருடக் கனவு மற்றும் தியாகத்தின் பலன் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
