ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது மர்ம நபர்கள் கல் மற்றும் கனமான பொருட்களை வீசி கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிங்கராயகொண்டா மற்றும் உலவபாலம் இரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை இரவு இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தத் தாக்குதலில் இரயில் எஞ்சினின் முன்பக்கக் கண்ணாடி (விண்ட்ஷீல்டு) சுக்குநூறாக உடைந்து சிதறியது.
இந்த விபத்தின் போது எஞ்சின் கேபினுக்குள் பணியில் இருந்த மூத்த உதவி லோகோ பைலட் (இரயில் ஓட்டுநர்) எம். ஜெயராம் என்பவர் மீது கண்ணாடிகளும் கற்களும் பலமாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இரயில் எஞ்சினுக்குள் ரத்தம் வழியும் நிலையிலும், லோகோ பைலட்டுகள் சாதுரியமாகச் செயல்பட்டு பயணிகளின் பாதுகாப்பைக் கருதி இரயிலை தொடர்ந்து இயக்கி, அடுத்த நிலையமான உலவபாலத்தில் பத்திரமாக நிறுத்தினர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இரயில்வே நிர்வாகமும், உள்ளூர் காவல்துறையும் இணைந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இரயில் எஞ்சினுக்குள் ஓட்டுநர் காயமடைந்து ரத்தக் கறைகளுடன் இருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஓடும் இரயில்கள் மீது கல் வீசும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது இரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
