கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் குதிரைகள் விவசாய நிலத்தில் மேய்ந்தது தொடர்பான முன்விரோதம் காரணமாக, ரகு என்பவர் ராமர் மற்றும் பிரசாந்த் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ராமர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த பிரசாந்த் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொலையாளி ரகுவும், பாதிக்கப்பட்ட ராமரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், பூம்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மேல்மலை கிராமங்களில் தீவிர பதற்றம் நிலவி வருகிறது.
சம்பவத்திற்குப் பிறகு கொலையாளி ரகு காவல் நிலையத்தில் சரணடைந்தபோதிலும், இந்த கொலையில் அவரது நண்பர்களுக்கும் தொடர்பிருப்பதாக ராமரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ரகுவின் ஆதரவாளர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்யக் கோரியும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி வழக்கில் நடுநிலையான விசாரணை நடத்த வலியுறுத்தியும், ராமரின் குடும்பத்தினர் மற்றும் அவரது சமூகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பூம்பாறை – மன்னவனூர் முக்கிய சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாகச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சில இடங்களில் இருசக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையைக் காவல்துறையினர் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
