தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் வேளையில், அக்கட்சியின் வேட்பாளர் தேர்வுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏனாதி மதன் மீது கடுமையான புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே கஞ்சா வழக்கு, போலி மருத்துவம் மற்றும் சாதிய பாகுபாடு உள்ளிட்ட பின்னணி கொண்டவர்களுக்கு தவெக சீட் வழங்கியிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், தற்போது அக்கட்சியின் உள்மட்டத்திலேயே அதிருப்தி வெடித்துள்ளது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.
இது தொடர்பாக தவெக தஞ்சை தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ப.பாத்திமாகனி வெளியிட்டுள்ள அறிக்கை கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனாதி மதன் வேட்பாளராக நீடித்தால், பட்டுக்கோட்டை தொகுதியில் பெண்களுக்கு மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்றும், இதனால் கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டு நான்காம் இடத்திற்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்த பெண் உறுப்பினர்கள் பலரும் இந்த வேட்பாளர் தேர்வுக்கு ஆதரவு வழங்கத் தயக்கம் காட்டி வருவதாகவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாத்திமாகனி தனது புகாரில் மேலும் குறிப்பிடுகையில், ஏனாதி மதன் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், கட்சியில் தனக்கு வேண்டப்பட்ட உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே முக்கியப் பொறுப்புகளை வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, மாவட்ட மகளிரணியில் குறிப்பிட்ட ஒரு சாதி அடிப்படையிலேயே பதவிகள் நிரப்பப்பட்டுள்ளதாக அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார். மகளிர் தின விழா மற்றும் இப்தார் நோன்புத் திறப்பு போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் தன்னை திட்டமிட்டே புறக்கணித்துவிட்டு, வேட்பாளர் தனது ஆதரவாளர்களைக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தலைமைக்குத் தவறான தகவல்களை அளித்து, தன்னைச் செயல்படாத நிர்வாகியாகக் காட்ட வேட்பாளர் மதன் முயற்சிப்பதாகக் கூறியுள்ள பாத்திமாகனி, கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும் எனத் தளபதி விஜய் அவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். ஒருபுறம் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு ஆதரவாகக் கட்சி செயல்படுவதாக வெளியிலிருந்து விமர்சனங்கள் வரும் நிலையில், மறுபுறம் உட்கட்சிப் பூசல்களும் மகளிரணியின் எதிர்ப்பும் தவெக தலைமைக்கு இத்தேர்தல் களத்தில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
