தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என இந்தியக் குடியரசு கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத சூழல் ஏற்பட்டால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவைக் கோரி என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
மேலும் விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதும் அத்வாலே, தேவைப்பட்டால் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பாஜக தலைமையிலான கூட்டணி தயாராக இருப்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், அத்வாலேவின் இந்தக் கருத்தை அரசியல் விமர்சகர்கள் முற்றிலுமாக மறுக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியபோதே, தனது கட்சியின் கொள்கை “மதச்சார்பற்ற சமூக நீதி” என்று அறிவித்த விஜய், பாஜகவை தனது கொள்கை ரீதியான எதிரியாகவே அடையாளப்படுத்தியுள்ளார்.
மேலும், பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அவர் ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில், தேர்தலுக்குப் பிந்தைய ஆதரவு என்பது விஜய்யின் அரசியல் அடையாளத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவர் ஒருபோதும் என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவளிக்க வாய்ப்பில்லை என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
