தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சீட் கிடைக்காத அதிருப்தியால் அதிமுகவைத் தொடர்ந்து திமுகவிலும் அடுத்தடுத்து அரங்கேறும் ராஜினாமாக்கள் அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சென்னை தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், தனது கட்சிப் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
அதேபோல், வேலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் மகனும், குடியாத்தம் வடகிழக்கு ஒன்றிய செயலாளருமான சுரேஷ்குமார் தனது ஆதரவாளர்களுடன் பதவியை துறந்துள்ளார். கட்சியின் இந்த உள்கட்சி பூசல், தேர்தல் பணிகளில் தொய்வை ஏற்படுத்தக்கூடுமோ என்ற அச்சத்தை உடன்பிறப்புகள் மத்தியில் விதைத்துள்ளது.

இந்நிலையில் மற்றொருபுறம், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.என்.பி. இன்பசேகரன் திமுகவிலிருந்து விலகி பாமகவில் இணையப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது.
மேலும் நீண்டகாலமாக திமுகவில் செல்வாக்குடன் விளங்கிய குடும்பத்தைச் சேர்ந்த இவர், மாற்று முகாமிற்குச் சென்றால் அது தருமபுரி மாவட்ட திமுகவிற்குப் பின்னடைவாக அமையும் எனக் கருதப்படுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், முக்கிய நிர்வாகிகள் காட்டும் இந்த அதிருப்திப் போக்கு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
