தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 40 பிரபலங்களை நட்சத்திரப் பேச்சாளர்களாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தவெக தலைவர் விஜய், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோருடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களான வைகோ, தொல். திருமாவளவன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் எப்படி மற்றொரு கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட முடியும் என்ற கேள்வியை அதிமுக தற்போது மிக வலுவாக முன்வைத்துள்ளது.
இது குறித்து அதிமுக வழக்கறிஞர் அணிச் செயலாளரும் ராஜ்ய சபா எம்பியுமான இன்பதுரை சரமாரியான சட்டக் கேள்விகளை எழுப்பியுள்ளார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (R.P. Act, 1951) பிரிவு 77(1) மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு அரசியல் கட்சி தனது சொந்த கட்சியின் உறுப்பினரை மட்டுமே தனது நட்சத்திரப் பேச்சாளராக நியமிக்க முடியும். வேறு கட்சியின் தலைவர்களாக இருக்கும் நபர்களை, தவெக தனது பட்டியலின் கீழ் கொண்டு வந்திருப்பது எந்த சட்ட அடிப்படையில் சாத்தியம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தேர்தல் அறிவிக்கை வெளியான 7 நாட்களுக்குள் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற காலக்கெடு முடிந்துவிட்டது. இதனால், இந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இனி தங்கள் சொந்த கட்சிகள் சார்பில் புதிதாக விண்ணப்பித்து, பிரிவு 77-ன் கீழ் வழங்கப்படக்கூடிய தேர்தல் செலவு விலக்குப் பலன்களைப் பெற முடியாது. எனவே, இவர்கள் தவெக வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் மேற்கொள்ளும் பட்சத்தில், இவர்களுக்கான முழுச் செலவுகளும் சம்பந்தப்பட்ட தவெக வேட்பாளர்களின் சொந்தத் தேர்தல் செலவுக் கணக்கிலேயே சேர்க்கப்பட வேண்டும் என்பது சட்ட விதிமுறையாகும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற T. Paulraj v. Election Commission of India வழக்கிலும் தேர்தல் ஆணையம் இந்த விதியைத்தான் தெளிவாக வலியுறுத்தியுள்ளது. கூட்டணிக் தலைவர்களின் பிரச்சாரச் செலவுகள் தவெக வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்கப்படாமல் மறைக்கப்பட்டாலோ, அல்லது இதன் காரணமாக வேட்பாளர்களின் நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் செலவு வரம்பு மீறப்பட்டாலோ, அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 123(6)-ன் கீழ் ‘முறையற்ற தேர்தல் நடவடிக்கை’ (Corrupt Practice) ஆகக் கருதப்படும் என்றும், இது வேட்பாளரின் வெற்றியையே செல்லாததாக்கும் அபாயம் கொண்டது என்றும் இன்பதுரை எச்சரித்துள்ளார்.
