கோகோ கோலா திரவத்தைச் சிந்தியபடி செல்லும் லாரிக்கு அருகே, மென்டோஸ் மிட்டாய் பெட்டிகளைத் திறந்து போட்டதால் ஏற்பட்ட வெடிப்பில் நபர் ஒருவர் வானத்தில் தூக்கி வீசப்படுவது போன்ற டேஷ்கேம் பாணி வீடியோ இணையத்தில் வெளியாகி 3.6 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
துவக்கத்தில் இந்த விசித்திர வீடியோவை உண்மை என நம்பிப் பலர் பகிர்ந்த நிலையில், அதில் உள்ள சில தவறுகளை வைத்து இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். மென்டோஸ் லாரியில் “Mentos” என்பதற்குப் பதிலாக “mentes” என எழுதப்பட்டிருப்பது மற்றும் நபர் கையில் வைத்திருக்கும் பாத்திரம் மாயமாவது போன்ற பிழைகளை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி இந்த கற்பனை வீடியோ உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. நிஜம் போலவே தோன்றும் இதுபோன்ற ஆபத்தான மற்றும் தர்க்கமற்ற ஏஐ வீடியோக்கள் இணையத்தில் அதிகரித்து வருவது குறித்துத் தொழில்நுட்ப ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
