தமிழக அரசியல் களம் தற்போது புதிய திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூவும் தவெகவில் இணையக்கூடும் என்று பரவலாகப் பேசப்பட்டது. செய்தியாளர்கள் இதுகுறித்து அவரிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பியபோது, அவர் தனது விரல்களால் ‘இரட்டை இலை’ சின்னத்தைச் சைகையாகக் காட்டினார். “தனது மூச்சு இருக்கும் வரை இரட்டை இலை தான்” என்பதைச் செய்கையில் உணர்த்திவிட்டு, அவர் அங்கிருந்து வேகமாகத் தனது காரில் ஏறிப் புறப்பட்டதன் மூலம் தவெக குறித்த வதந்திகளுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த காலங்களில் மதுரையில் பாஜகவினர் அதிமுகவை ஆதிக்கம் செலுத்த தொடங்கிய போது செல்லூர் ராஜூ அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது. அதற்கேற்ப எடப்பாடி பழனிசாமியின் காரில் இருந்தும் செல்லூர் ராஜூ இறக்கிவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதாகவும், தேர்தல் தோல்விக்குப் பின் அவர் மாற்று கட்சியை நோக்கி நகரக்கூடும் என்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சுகள் எழுந்தன. இருப்பினும், தவெகவில் இணைய அவருக்குப் பல அரசியல் முட்டுகட்டைகள் உள்ளன. மதுரையைச் சேர்ந்த தவெக மாவட்டச் செயலாளர்களான கல்லாணை மற்றும் தங்கப்பாண்டி ஆகிய இருவருமே செல்லூர் ராஜூவுக்கு எதிராக இருக்கிறார்கள். மேலும், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரும் மதுரையின் மூத்த தலைவர்களான ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோரை தவெகவில் சேர்க்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது.
இன்னொரு பக்கம், தவெகவில் இணையும் அதிமுகவினருக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்ற ஒரு பார்வையும் நிலவுகிறது. ஏற்கனவே அமைச்சர் பதவி வரை எட்டிப்பிடித்த சீனியரான செல்லூர் ராஜூ, கட்சிக்குள் இருக்கும் ஜூனியர்களிடம் சென்று பதவிகளைப் பெற விரும்பவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதனால் இனி வேறு கட்சிக்குச் செல்ல வேண்டாம் என்ற முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிந்தாலும், அதிமுக தலைமை மீது அதிருப்தி அதிகமாகும் பட்சத்தில் அவர் திமுகவை நோக்கி நகரக்கூடும் என்ற மாற்று அரசியல் பேச்சுகளும் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன.
