அதிமுகவின் மாநில கலைப்பிரிவு செயலாளராகவும், பிரபல திரைப்பட இயக்குநராகவும் வலம் வந்த ஆர்.வி. உதயகுமார், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள உருக்கமான கடிதத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைத்த தனக்கு, தற்போதுள்ள கட்சியின் நிலை ஆழ்ந்த வேதனையையும் கவலையையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய மனநிலையில் கட்சியில் நீடிக்க விருப்பமில்லாததால் விலகுவதாகத் தெரிவித்துள்ள அவர், இதுவரை தனது கட்சிப் பணிகளுக்குத் துணையாக நின்ற எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாநில, மாவட்ட, உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவருக்கும் தனது கணத்த இதயத்துடன் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக விடைபெற்றுள்ளார்.
