“ரூ.15,032 கோடி பட்ஜெட்… 15,000+ அரசு வேலைவாய்ப்பு”… தவெக அரசின் மாஸ் பிளான்… இரவோடு இரவாக முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு….!

By Nanthini on ஆனி 16, 2026

Spread the love

தமிழகத்தில் அண்மைக் காலமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடை பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, இந்த மின் வெட்டுப் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில், மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், மின் கட்டமைப்பை சீரமைக்கவும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று அவசர எரிசக்தித் துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மின் துறை அமைச்சர் நிர்மல் குமார், துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தின் முடிவில், தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்களை அமைக்க முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மின் பகிர்மானப் பணிகளை விரைவுபடுத்தவும், பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்யவும் காலிப் பணியிடங்களாக உள்ள 15,058 மின் பணியாளர்களை முறைப்படி உடனடியாக நியமிக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார்.

   

மாநிலத்தில் மின் உற்பத்தி மற்றும் கொள்முதல் போதுமான அளவில் இருப்பதால் மின்சார பற்றாக்குறை எதுவும் இல்லை என்று கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது. எனினும், பழமையான மின் உபகரணங்கள், நிலத்தடி கேபிள் பழுதுகள், அதிகரித்துள்ள மின் நுகர்வு மற்றும் இதர சேவைத் துறைகளின் சாலை தோண்டும் பணிகளால் ஏற்படும் எதிர்பாராத சேதங்களே தற்போதைய மின்தடைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகரில் மட்டும் சுமார் 2,275 கோடி ரூபாய் மதிப்பில் மின் விநியோகக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தற்பொழுது தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

   

பொதுமக்களின் புகார்களுக்கு 24 மணி நேரமும் விரைந்து தீர்வு காணும் வகையில் ‘மின்னகம்’ (94987 94987) சேவை மையம் வழியாகப் புகார்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் வாட்ஸ்அப் சேவையும் இந்த புகார் மேலாண்மை அமைப்போடு ஒருங்கிணைக்கப்பட உள்ளது. குறிப்பாக சென்னையில் ஏற்கனவே உள்ள 125 ரோந்து குழுக்கள் மற்றும் பழுது நீக்கும் வாகனங்கள் மூலம் இரவு நேரப் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் புதிய நீர்மின் திட்டங்கள் மூலம் எதிர்கால மின் தேவையை தடையின்றிப் பூர்த்தி செய்யவும் தவெக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.