மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் விமானப்படை வீரர் ஒருவரின் 24 வயது மனைவிக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான மற்றும் கொடூரமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனது பழைய வகுப்புத் தோழரான அயாஸ் மதரே (26) மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டிப் பணம் பறித்தல், சூனியம் மற்றும் கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தலா இரண்டு பேரை நாக்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அயாஸ் மதரே மற்றும் அவரது கூட்டாளி அமீன் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இந்த கட்டாய மதமாற்ற சடங்கை நடத்தியதாகக் கூறப்படும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹஸ்ரத் மௌலானா (மதகுரு) என்ற மூன்றாவது குற்றவாளியைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையின்படி, கடந்த பிப்ரவரி 8 அன்று ஒரு ஹோட்டலில் நடந்த சந்திப்பின் போது, அயாஸ் மதரே அந்தப் பெண்ணின் பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்துள்ளார். சுயநினைவற்ற நிலையில் இருந்த பெண்ணை ஆட்சேபனைக்குரிய வகையில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துக்கொண்ட அயாஸ், பின்னர் அவற்றை சமூக ஊடகங்களில் பரப்புவதாகவும், அவரது கணவருக்கு அனுப்புவதாகவும் மிரட்டிப் பணம் பறிக்கத் தொடங்கியுள்ளார். அச்சுறுத்தலுக்கு பயந்து அந்தப் பெண் சுமார் 4 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளார். ஆனால், அதோடு நிறுத்தாமல் அயாஸ் அவரைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இந்த வழக்கில் சிக்கியுள்ள ஒரு முக்கிய வீடியோ ஆதாரத்தில், அந்தப் பெண் தன்னை விட்டுவிடுமாறு அழுதுகொண்டே கெஞ்சுவதும், அயாஸ் மத வசனங்களை ஓதி அவர் மீது ஊதி கைகளை வலுக்கட்டாயமாகப் பிடிப்பதும் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகளாக அமைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள வாக்குமூலத்தில், அயாஸ் அடிக்கடி ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் ஏதோ ஒரு கலவையைக் கொண்டு வந்து தன்னைக் குடிக்க வற்புறுத்துவார் என்றும், உருது மொழியில் முணுமுணுத்து தன் முகத்தில் ஊதி அது “ஹிப்னாஸிஸ் மற்றும் மாந்திரீகம்” என்று கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த மே 31 அன்று, அயாஸும் அவரது கூட்டாளிகளும் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக கல்மேஷ்வர் பகுதிக்குக் கடத்திச் சென்றுள்ளனர். அங்கு மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஹஸ்ரத் மௌலானா என்ற மதகுரு, பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக மதச் சடங்குகளைச் செய்து, அவரை மதம் மாற்றுவதற்காக ‘குபூல் ஹை’ என்று கூறும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
இந்த சடங்கிற்குப் பிறகு, அந்தப் பெண் இஸ்லாமிற்கு மதம் மாறிவிட்டதாகவும், அயாஸுடனான அவரது ‘நிக்காஹ்’ (திருமணம்) முடிந்துவிட்டதாகவும் மௌலானா அறிவித்துள்ளார். மேலும், அவர் இறைச்சியை உண்ணவும், மத ஸ்லோகங்களை ஓதவும் கட்டாயப்படுத்தப்பட்டதோடு, மீண்டும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அயாஸால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது குறித்து நாக்பூர் துணை ஆணையர் சுரேஷ் ரெட்டி கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை, மிரட்டிப் பணம் பறித்தல், கட்டாய மதமாற்றம் மற்றும் சூனிய எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள மௌலானாவைத் தேடி தனிப்படை மற்றொரு மாநிலத்திற்குச் சென்றுள்ளது; முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
