விருதுநகர் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ பி.செல்வம், கனிமவள ஆய்வு தொடர்பாகப் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியாகி வைரலாகி வரும் வீடியோவில், விருதுநகர் பகுதியில் பாறை கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை வழிமறித்து பர்மிட் எத்தனை யூனிட்டுகளுக்கு உள்ளது என எம்.எல்.ஏ செல்வம் விசாரணை நடத்துகிறார். பின்னர் நேரடியாகக் கனிமவளக் குவாரி சைட்டிற்குச் சென்று, அங்கிருந்தவர்களிடம் கண்டிப்பான குரலில் பேசி, கனிமவளத்துறை அமைச்சருடன் தொலைபேசியில் பேசிப் புகார் தெரிவித்துள்ளார். இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளையும் வீடியோவாக எடுத்து ரீல்ஸாகப் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே தனியார் பேருந்து ஊழியர்களை நேரில் அழைத்து சஸ்பெண்ட் செய்து சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது மீண்டும் அரசு அதிகாரிகளின் பணியில் தலையிட்டு ரீல்ஸ் போட்டு வருவது விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவர் விஜய் தனது மொபைலில் அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பவர் என்பதால், அவரது கவனத்தை ஈர்த்து எதிர்காலத் தவெக அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்காகவே எம்.எல்.ஏ செல்வம் இத்தகைய ரீல்ஸ் வியூகத்தைக் கையாள்கிறாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
