சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் அதிரடி அரசியலுக்குத் திரும்பும் முயற்சியில் இறங்கியுள்ளார். தூத்துக்குடியில் தனித்துச் செல்வாக்கு செலுத்தி வந்த அவர், திமுக மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு சற்றே அமைதி காத்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தனது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வரும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு 70 வயதைக் கடந்துவிட்டதால், கட்சியின் மறுசீரமைப்பின்போது தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற தயக்கம் நிலவி வந்தது. இதற்காக மூத்த தலைவர் கே.என்.நேரு உள்ளிட்டோர் வாயிலாக திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பைக் கைப்பற்ற அவர் காய்நகர்த்தி வந்தபோதிலும், அதற்கான சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கின் விடுதலை அவருக்குப் பெரும் அரசியல் உற்சாகத்தை அளித்துள்ளது.
திருச்செந்தூர் தொகுதியைக் மையமாகக் கொண்டு எழுந்துள்ள அரசியல் சூழலில், அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளருக்கு முக்கியப் பொறுப்பு கிடைக்குமா அல்லது கனிமொழியின் ஆதரவாளருக்கு வாய்ப்பு அமையுமா என்ற விவாதம் உடன்பிறப்புகள் மத்தியில் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் தனக்கான இடத்தை உறுதிசெய்யவும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பைத் தனது ஆதரவாளருக்குப் பெற்றுத்தரவும் ஸ்டாலினிடம் நேரடியாகவே கோரிக்கை வைக்க அவர் முடிவு செய்துள்ளார்.
அத்துடன், அம்பாசமுத்திரம் (அம்பை) தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பைக் கைப்பற்றுவதிலும் அனிதா ராதாகிருஷ்ணன் தீவிரமாக உள்ளார். இடைத்தேர்தல் பொறுப்பை ஏற்று திமுக வேட்பாளரை வெற்றி பெற வைப்பதன் மூலம், கட்சித் தலைமையிடம் தனது செல்வாக்கை நிரூபித்து திமுகவின் உயர்மட்டக் குழுவில் துணைப் பொதுச்செயலாளர் போன்ற முக்கியப் பொறுப்பைப் பெறுவதே அவரின் முதன்மைத் திட்டமாக அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
