“விஜய் vs ராகுல் காந்தி”….. பிரதமர் நாற்காலி யாருக்கு?… தவெக எம்எல்ஏ-க்களின் பேச்சுக்கு காங்கிரஸ் கொடுத்த நச்சு பதில்…..!

By Nanthini on புரட்டாதி 2, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி, தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தவெக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பொது மேடைகளிலும் சட்டசபையிலும் “அடுத்த பிரதமர் விஜய் தான்” என்று பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியான இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் அடுத்த பிரதமர் ரேஸில் விஜய்க்கு 9% ஆதரவு இருப்பதாகத் தெரியவந்ததும், வட மாநிலங்களில் அவரை மையம் கொண்ட ரீல்ஸ்கள் வைரலாவதும் இந்த விவாதத்தை மேலும் சூடாக்கியுள்ளன.

இந்தச் சூழலில், தவெக எம்எல்ஏ கனிமொழி சட்டசபையில் பேசுகையில், “2026-இல் ராகுல் காந்தி எப்படி விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தாரோ, அதேபோல் 2029-இல் விஜய்யை பிரதமர் நாற்காலியில் ராகுல் காந்தி கைபிடித்து அமர வைப்பார்” என்று கூறியது காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணி உறவில் உரசல் நிலவுவதாகக் கருதப்பட்டு, காங்கிரஸ் தலைவர்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசித்த நிலையில், கனிமொழியின் இப் பேச்சு மேலும் சலசலப்பை உருவாக்கியது.

   

இதனிடையே, சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் சட்டசபைக் குழு தலைவர் தாரகை கத்பர்ட் இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கமளித்துள்ளார். “நாட்டின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தலைவர் ராகுல் காந்தி தான் என்பது நாடு முழுமைக்கும் தெரியும். அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் என்பதில் முதல்வர் விஜய் இதுவரை மிகவும் தெளிவாக இருக்கிறார்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

   

தொடர்ந்து பேசிய தாரகை கத்பர்ட், “தவெக எம்எல்ஏ-க்கள் அனைவரும் அரசியலுக்குப் புதியவர்கள்; அவர்கள் இன்னும் ரசிக மனப்பான்மையிலேயே பேசுகிறார்கள். தங்களது கட்சித் தலைவரை உயர்த்திப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதால், இதை வைத்து தேவையில்லாத யூகங்களை உருவாக்க வேண்டாம்” என்று கூறினார். இதன் மூலம், தவெக-காங்கிரஸ் கூட்டணியில் எவ்விதப் பிளவும் இல்லை என்பதையும், ராகுல் காந்தியே தங்களின் பிரதமர் வேட்பாளர் என்பதையும் அவர் தெள்ளத்தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளார்.