சென்னை அடையாறில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் பேத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடத்தில் காந்தி நகர் எஸ்பிஐ என்ஆர்ஐ வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் இருந்த லிஃப்ட் பழுதடைந்த நிலையில், அதைச் சீரமைப்பது தொடர்பாக வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங் மற்றும் கயல்விழி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், கயல்விழி வங்கி மேலாளரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்து, எஸ்பிஐ தலைமை மேலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில் சென்னை சாஸ்திரி நகர் காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் கயல்விழியைப் போலீசார் கைது செய்தபோதிலும், கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே அவரை காவல்நிலைய பிணையில் (Station Bail) விடுவித்தனர்.
இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கயல்விழி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஒரு சிவில் விவகாரத்துக்குக் கிரிமினல் சாயம் பூசப்பட்டுள்ளதாகவும், வங்கியின் மேலாளரே தம்மைத் தகாத வார்த்தைகளால் திட்டியதை மறைத்துப் பொய்ப் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பவத்தை நேரில் பார்க்காத நபர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கயல்விழி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மனு குறித்து சென்னை காவல்துறையும் எஸ்பிஐ மண்டல தலைமை மேலாளரும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
