சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தனது உட்கட்சியை முழுமையாக மறுசீரமைக்கும் தீவிரப் பணியில் இறங்கியுள்ளது. கட்சியின் செயல்பாட்டை அதிகப்படுத்தவும், நிர்வாகத்தை எளிமைப்படுத்தவும் பல அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மாவட்டச் செயலாளர்களுக்கு வயது வரம்பு, அதிகபட்சம் 2 முறை மட்டுமே பதவி வகிக்கும் வாய்ப்பு, ஒரு மாவட்டச் செயலாளருக்கு அதிகபட்சமாக 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு போன்ற புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் இருந்த 77 அமைப்பு ரீதியான திமுக மாவட்டங்கள் தற்போது 110-ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, தலைநகர் சென்னையில் இதுவரை 6 அமைப்பு ரீதியான மாவட்டங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது 10 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னை வடக்கு (ஆர்.டி. சேகர்), சென்னை வடகிழக்கு (மாதவரம் எஸ். சுதர்சனம்), சென்னை கிழக்கு (பி.கே. சேகர்பாபு), சென்னை மேற்கு (சிற்றரசு), சென்னை தென்மேற்கு (மயிலை த. வேலு) மற்றும் சென்னை தெற்கு (மா. சுப்பிரமணியன்) ஆகிய 6 மாவட்டச் செயலாளர்களின் கீழ் தொகுதிகள் செயல்பட்டு வந்தன. தற்போது இவர்களிடம் இருந்த சில தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டு, சென்னை வடமேற்கு, சென்னை மத்தி, சென்னை மத்திய கிழக்கு மற்றும் சென்னை மத்திய மேற்கு ஆகிய 4 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மறுசீரமைப்பைத் தொடர்ந்து, சென்னையில் புதிய மாவட்டச் செயலாளர்களாகப் பொறுப்பேற்கவுள்ள நிர்வாகிகளின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாவட்டத்திற்குப் புழல் நாராயணன், கே.பி.பி. சங்கர் அல்லது மாதவரம் சுதர்சனம் பெயர்களும், வடக்கு மாவட்டத்திற்குப் பரம்பூர்/கொளத்தூர் தொகுதிகளை உள்ளடக்கி கிரிராஜன் அல்லது ஆர்.டி. சேகர் பெயர்களும் பரிசீலிக்கப்படுகின்றன. அதேபோல், வடமேற்கு மாவட்டத்திற்குச் சுபேர் கான் அல்லது இளையா அருணா, மத்தி மாவட்டத்திற்குப் பரந்தாமன் அல்லது கார்த்திக், மத்திய கிழக்கு மாவட்டத்திற்குச் சிற்றரசு, மற்றும் மத்திய மேற்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
அதேவேளையில், சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தென்மேற்கு மாவட்டத்திற்கு கே.கே. நகர் தனசேகர் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா, தென்கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தெற்கு மாவட்டத்திற்கு அரவிந்த் ரமேஷ் ஆகியோரின் பெயர்கள் உத்தேசப் பட்டியலில் முன்னணியில் உள்ளன. இருப்பினும், இது முற்றிலும் ஒரு உத்தேசப் பட்டியல் மட்டுமே என்றும், திமுகவின் உட்கட்சித் தேர்தல் நிறைவடைந்த பிறகே புதிய மாவட்டச் செயலாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தலைமை மூலம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
