தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் நெருக்கடியில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க கோரி தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது வழக்கு விசாரணை தொடங்கியதும் முதல் கேள்வியாக, விஜய் பிரச்சார வாகனம் வந்தபோது இரண்டு வாகனங்களை இடித்து கீழே விழுந்தது, நீங்கள் அதை பார்த்தீர்களா என மனுதாரர் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதேசமயம் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது என நீதிபதி காட்டமாக கூறினார். மேலும் ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என பல கேள்விகளை அடுக்கடுக்காக நீதிபதி எழுப்பி இருந்தார். இந்நிலையில் விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜயின் பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து பனையூர் அலுவலகத்தில் உள்ள பேருந்தை போலீசார் பறிமுதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
