2025 ஆம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே மூன்று கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடைபெற்று உள்ளது. கடந்த மாதம் 30 ஆம் தேதி நடந்த முதல் கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ மாணவிகளுக்கும், கடந்த ஜூன் நான்காம் தேதி இரண்டாம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும், நேற்று முன்தினம் 32 சட்டசபை தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 19 சட்டசபை தொகுதிகளை கொண்ட மாணவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கௌரவித்தார். இப்படியான நிலையில் மாமல்லபுரம் தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக இன்று மாணவர்களுக்கான நான்காம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் விஜய் கலந்து கொண்டு 39 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழை வழங்கி கௌரவித்தார். அப்போது குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது ஒரு படம் முடியுங்கள் என்று மாணவி ஒருவர் விஜய்யிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு try பண்றேன்மா என்று சிரித்துக் கொண்டே விஜய் பதிலளித்தார். அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய் அவரது கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்குப் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போடும் விஜய் நேரடி முழு அரசியலில் ஈடுபட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இப்படியான நிலையில் ரசிகர்களின் விருப்பத்தை விஜய் நிறைவேற்றுவாரா என்பது மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
