புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று வெளியிட்டார். நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், இன்று இந்த அறிவிப்பு வெளியானது. தமிழகம் மற்றும் புதுவையில் தனித்துப் போட்டியிடும் தவெக, இதற்காக தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் வேட்பாளர் நேர்காணல்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியான சில மணி நேரங்களிலேயே கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி தவெக அலுவலகம் முன்பு திரண்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர், வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த தங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், நேற்று வந்தவர்களுக்கும், பிற கட்சிகளில் இருந்து தாவியவர்களுக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர். குறிப்பாக, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீதே தங்களின் குற்றச்சாட்டுகளை நிர்வாகிகள் முன்வைத்தனர்.
சீட் ஒதுக்கீட்டில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அதிருப்தி நிர்வாகிகள், “கட்சித் தலைவர் விஜய் பணம் கேட்கவில்லை, ஆனால் அவரைச் சுற்றி இருப்பவர்கள் பணம் வாங்கிக் கொண்டு புது ஆட்களுக்கு வாய்ப்பு வழங்கி விஜய்யின் பெயரைக் கெடுக்கிறார்கள்” என்று வேதனையுடன் தெரிவித்தனர். செலவுகளைப் பார்த்துக்கொள்வதாகக் கூறியும் தங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாகவும், மக்கள் ஆதரவு இல்லாதவர்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். போராட்டத்தின் உச்சகட்டமாக, புஸ்சி ஆனந்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தங்கள் குமுறல்களைக் கொட்டித் தீர்த்த நிர்வாகிகள், கட்சியின் துண்டு மற்றும் புகைப்படங்களை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றனர். மேலும், தங்களை ஏமாற்றியதைக் கண்டிக்கும் வகையில், தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் அவர்கள் சவால் விடுத்தனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக-வின் கோட்டையாகக் கருதப்படும் புதுச்சேரியிலேயே நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
