தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அஜிதா ஆக்னல் என்பவர் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பெண் நிர்வாகியாக உள்ளார். இவருக்கு சமீபத்தில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாததால் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்னைக்கு சென்று நடிகர் விஜயின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அவரை சமாதானப்படுத்தி கட்சி நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர். பிறகு தூத்துக்குடிக்கு திரும்பிய அவர் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்கள் பரவியதால் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி அஜிதா அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அவரை ஏராளமானவர்கள் சந்தித்து நலம் விசாரித்த நிலையில் தற்போது அவருக்கு திடீரென உடல்நிலை மோசம் அடைந்ததால் உடனே அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் தற்போது விஜய்க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
