தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வர் ஸ்டாலின் பல வியூகங்களை வகுத்து வருகின்றார். தனது கூட்டணி கட்சிகளை பலமாக வைத்திருக்கும் திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் அவர்களுடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் முஸ்லிம்கள் 7 சதவீதம் உள்ளதால் திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என IUML பொதுச்செயலாளர் முகமது அபூபக்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக IUMLக்கு ஐந்து தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்ற அவர், கடையநல்லூர் தொகுதியை மீண்டும் கேட்டு பெற உள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் திமுக முஸ்லிம் கட்சிகளுக்கு மொத்தமாகவே நான்கு சீட்கள் தான் ஒதுக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு வரும் நிலையில் தற்போது இந்த விவகாரமும் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
