தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே மட்டும் தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற முக்கிய நிர்வாகிகள் மாற்றுக் கட்சியில் இணைந்து வருவது இபிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் NDA கூட்டணியில் அங்கம் வகித்த நிலையில் இ பி எஸ் முதல்வர் வேட்பாளராக நியமிக்கப்பட்டதால் கூட்டணியில் இருந்து விலகினர். தற்போது அவர்கள் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
இந்நிலையில் கோவையில் உள்ள தனி இல்லத்தில் டிடிவி தினகரனுக்கு அண்ணாமலை இரவு விருந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது இருவரும் ஒரு மணி நேரம் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியதாக நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விருந்தின் நடுவே டெல்லியில் இருந்து போன் வந்ததால் அண்ணாமலை உடனடியாக புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் NDA கூட்டணிக்கு டிடிவி தினகரன் மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
