தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு இந்த முறையும் ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக தேடுதலில் வெற்றி பெற பல வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெற முடியும் என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதே சமயம் NDA கூட்டணியில் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என்று டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் பிரிவினைவாத அரசியல் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது, அதை அனுமதிக்க மாட்டோம் என்று டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் பாஜக கூட்டணியில் அமமுக மீண்டும் இணையாது என்பது உறுதியாகி உள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் பாஜக நிலைப்பாட்டை டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்திருந்தார். தற்போதைய தீர்மானத்தால் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் அமமுக இணைய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன
