திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி இன்று (ஜனவரி 5, 2026) தனது 58-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கனிமொழிக்கு வாழ்த்துகளைக் குவித்து வரும் நிலையில், அவரது இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கனிமொழியைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “இந்த பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்; நீங்கள் விரும்பியவை அனைத்தும் கைகூட எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று விஜய் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக என்ற கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், திமுகவின் முக்கியத் தூணாக விளங்கும் கனிமொழிக்கு வாழ்த்துத் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
