அம்முக மதுரை மாநகரத்திற்கு மாவட்ட சார்பாக தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசியல் ரீதியாக எது நடந்தாலும் கட்சியையும் தொடர்பு படுத்தி அரசியல் விமர்சகர்கள் பேசுகிறார்கள். நான் தூண்டிவிட்டு தான் தமிழக வெற்றி கழகம் கட்சியில் செங்கோட்டையன் இணைந்ததாக சொல்கின்றனர். ஓபிஎஸ் எந்த முடிவு எடுத்தாலும் நான்தான் தூண்டி விடுவதாக கூறுகிறார்கள். ஓபிஎஸ் முடிவு எடுத்துவிட்டார் டிடிவி தினகரன் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று விவாத மேடைகளில் பேசுகின்றனர்.
எங்கள் கட்சி என்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். எங்கள் தகுதியான வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கின்ற கூட்டணிக்கு தான் நாங்கள் செல்வோம். திமுகவில் ஏழு வருடங்களாக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு அறிவித்துவிட்டார்களா? நாங்கள் புதிதாக ஒரு கூட்டணியில் செல்ல இருக்கிறோம் என்றால் எத்தனை தொகுதிகள் என்று பேசிய பிறகுதான் கூட்டணிக்கு செல்வோம். கூட்டணி குறித்து நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.
அண்ணாமலை எங்களை அலைபேசியிலும் நேரிலும் கூட்டணிக்கு வர வேண்டும் என்றுதான் வலியுறுத்துகின்றார். டெல்லிக்கு சென்று விட்டு வந்ததாலோ அல்லது தலைவர்களை சந்தித்ததாலோ அழுத்தம் கொடுத்ததாக பேசி ஊடகத்தின் விருப்பத்தை எங்களிடம் திணிக்கின்றனர். . டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்ததாக பேசப்படும் செய்திகள் உண்மை அல்ல. பழைய கூட்டணியில் உள்ளவர்கள் கூட்டணிக்காக எங்களிடம் பேசுவது உண்மை. நான் தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமா என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
