“கும்பகர்ண தூக்கத்தில் விஜய் அரசு”… 5 கொடூரக் கொலைகளைப் பட்டியலிட்டு டிடிவி தினகரன் சரமாரித் தாக்குதல்…. கொந்தளிக்கும் அரசியல் களம்….!

By Nanthini on ஆவணி 31, 2026

Spread the love

தமிழகத்தில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக நடைபெறும் கொலை மற்றும் குற்றச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. சட்டம்–ஒழுங்கு நிலைமை அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, தமிழக வெற்றி கழக அரசு மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநிலத்தில் அன்றாடம் அரங்கேறி வரும் தொடர் கொலைகளைப் பட்டியலிட்டு, மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்லாவரத்தில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், கூடங்குளம் அருகே ரவுடியின் தலை துண்டிக்கப்பட்ட கொடூரம், நெல்லை அருகே நடந்த இளைஞரின் படுகொலை, சேலம் பகுதியில் பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் மற்றும் கள்ளக்குறிச்சியில் வயலுக்குக் காவல் சென்ற மூதாட்டி படுகொலை என அடுத்தடுத்து நடந்த கொடூர நிகழ்வுகளைத் தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய படுகொலைகள் பொதுவெளியில் மக்கள் சுதந்திரமாகவும் பயமின்றியும் நடமாடும் சூழலை அறவே அழித்துவிட்டதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

   

மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்குவதே ஒரு ஜனநாயக அரசின் தலையாய கடமையாகும். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களைக் கடந்த நிலையிலும், தவெக அரசு இன்னும் கும்பகர்ணத் தூக்கத்திலேயே இருப்பதாகத் தினகரன் விமர்சித்துள்ளார். சட்டம்–ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் மக்கள் நலச் சார்ந்த கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காமல், தேவையற்ற சர்ச்சை பேச்சுக்கள் மூலம் அவையின் நேரத்தை வீணடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது வெட்கக்கேடானது என்று அவர் சாடியுள்ளார்.

   

மேலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மானியக் கோரிக்கைகளைக் கூட மற்ற அமைச்சர்களை விட்டுத் தாக்கல் செய்ய வைத்த முதலமைச்சர், சட்டம்–ஒழுங்கு சீரழிவைக் கண்டு எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பதைக் பார்க்கும்போது காவல்துறையையும் அவர் பிறரிடம் ஒப்படைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்தத் தொடர் கொலைகளில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தருவதோடு, சட்டம்–ஒழுங்கை சீரமைத்து பொதுமக்களின் பாதுகாப்பை முதலமைச்சர் விஜய் உடனடியாக உறுதிசெய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.