சந்தேகம் பிடித்த காதலன்… குளிர்பானத்தில் விஷம் கொடுத்து 2 மாத கர்ப்பிணி கொடூர கொலை…. மும்பையில் நடந்த பயங்கரம்….!

By Nanthini on ஆவணி 31, 2026

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் செம்பூர் பகுதியில், காதலியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கர்ப்பிணிப் பெண் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 19 வயதான விஷ்ணுமாயா என்ற இளம்பெண் சுமார் இரண்டரை மாத கர்ப்பமாக இருந்துள்ளார். அவரது 25 வயது காதலரான ஆசிஷ் மகார், விஷ்ணுமாயா வேறு ஒரு நண்பருடன் பேசுவதைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம், இறுதியில் இத்தகைய கொடூரமான குற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.

சண்டைக்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது போல் நடித்த ஆசிஷ், காதலிக்கு விஷம் கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துள்ளார். அதில் நஞ்சு கலக்கப்பட்டிருந்தது தெரியாமல் விஷ்ணுமாயா அதைக் குடித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவருக்குக் கடும் வாந்தி ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. பதறிய உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

   

ஆரம்பத்தில் இச்சம்பவத்தைச் சந்தேகத்திற்குரிய மரணமாகவே காவல்துறையினர் பதிவு செய்தனர். ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உடலில் விஷம் கலந்திருப்பது உறுதியானதால், விசாரணை கொலை வழக்காக மாற்றப்பட்டது. உயிரிழப்பதற்கு முன் ஆசிஷ் கொடுத்த குளிர்பானத்தைக் குடித்ததாக விஷ்ணுமாயா கூறியதை வைத்து ஆசிஷிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், காவல்துறையினர் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.