“பைக்கை எரித்து விடலாம்; யூடியூப் சேனலை முடக்கி விடலாம்”.. பரபரப்பை ஏற்படுத்திய TTF வாசன் ஜாமீன் வழக்கு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

By admin on ஐப்பசி 5, 2023

Spread the love

பிரபல யூட்யூபரான டிடிஎப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கினார். சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே வேகமாகவும், கவன குறைவாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளானதாக அவர் மீது பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி TTF வாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் TTF வாசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் சாலையில் மிதமான வேகத்தில் வந்த போது கால்நடைகள் சாலையை கடந்ததால் திடீரென பிரேக் போட்டதால் வாகனத்தின் சக்கரம் தூக்கியதாகவும் பிரேக் போடாமல் இருந்திருந்தால் கால்நடைகள் மற்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சிறையில் உரிய சிகிச்சை பெற முடியாமல் காயங்கள் மோசமாகி வருவதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

   

   

எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் யூடியூபில் TTF வாசானை 45 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். அவர் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கில் இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் பாதுகாப்பு உடை அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதனை பார்த்து மற்ற இளைஞர்களும் பெற்றோர்களிடம் இரண்டு லட்ச ரூபாய் விலை மதிப்புள்ள பைக்கை வாங்கி கேட்டு சாகசத்தில் ஈடுபடுகின்றனர்.

 

விளம்பரத்துக்காகவும் மற்ற இளைஞர்களை தூண்டும் வகையில் செயல்பட்டுள்ள TTF வாசனின் செயல் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என கூறினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி TTF வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அவர் நீதிமன்ற காவலிலேயே இருக்கட்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். மேலும் சிறுவர்களை தவறாக வழிநடத்தும் TTF வாசனின் பைக்கை எரித்து விடலாம், அவரது யூடியூப் தளத்தை முடக்கிவிடலாம் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இது TTF வாசன் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.